நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு அளித்த பிறந்த நாள் பரிசு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு அளித்த பிறந்த நாள் பரிசு
x
தினத்தந்தி 28 Feb 2022 3:36 AM IST (Updated: 28 Feb 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு அளித்த பிறந்தநாள் பரிசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் இமாலய வெற்றியை, மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் அவர்களைவிட எனக்கு அதிகமாக இருந்தது.

அறிவாலயத்தில் அவர்களின் ஆர்வம் பொங்கிடும் ஒளிமுகம் கண்டு அகமகிழ்ந்தேன். மக்களின் கோரிக்கைகளை ஒன்றுவிடாமல் அக்கறையுடன் கேட்டு, அவற்றை நேரில் நிறைவேற்றி அரிய கடமை ஆற்றிட போகும் தி.மு.க.வினரிடமும், கூட்டணி கட்சியினரிடமும்தான் எத்தனை மகிழ்ச்சி. எவ்வளவு உணர்ச்சி.

தொடர் வெற்றி

முதல்-அமைச்சர் என்ற முறையில் பணிகள் நிறைந்திருந்த நிலையில் ஓய்வையும், உறக்கத்தையும் சற்று உதறி தள்ளிவைத்துவிட்டு, தி.மு.க.வினரை காணும் பேராவலில், ஒவ்வொரு நாளும் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்றபடியே அவர்களின் அன்பினை நிறைவுடன் ஏற்றுக்கொண்டேன். இந்த வெற்றி மாபெரும் வெற்றி; தி.மு.க.வின் தொடர்ச்சியான வெற்றி. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி, அதனுடன் இணைந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி, 2020-ல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, 2021-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை உருவாக்கிய வெற்றி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி என 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி.

6 பந்துகளில் ‘சிக்சர்’

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் ‘சிக்சர்’ அடிப்பது போன்ற வெற்றி இது; மக்கள் தந்த வெற்றி; இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும். இதற்காக அல்லும் பகலும் உழைத்திட்ட தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், ஆதரவு அமைப்பினர் அனைவருக்கும் நன்றி, நன்றி.

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சிறந்த அடையாளமான இந்த வெற்றி என்பது, மக்களுக்கு நாம் நிறைவேற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களால்தான் முழுமை பெறும். அதிலும், உள்ளாட்சி அமைப்புகள் என்பவை ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்குபவை; மக்களாட்சியின் உயிரோட்டத்தை கொண்டிருப்பவை. அதில் வெற்றி பெற்றவர்கள் ஆற்றும் விரைவான பணி என்பது மக்களுடன் நேரடியானது.

எதிர்பார்க்கும் பரிசு

வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ந் தேதி பொறுப்பேற்று கொள்ளும் நிலையில், மார்ச் 4-ந் தேதி அன்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தங்கள் உள்ளாட்சி அமைப்புக்கான தலைவரையும், துணைத்தலைவரையும் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். அந்த பொறுப்புகளுக்கு தி.மு.க.வின் சார்பில் அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதுபோலவே, கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது உங்களில் ஒருவனான எனக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர்- துணைத்தலைவர் தேர்தலில் கட்டுக்கோப்புடன், ஒருமனதுடன் செயல்படுவதுதான் தி.மு.க.வினரிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு.

உங்களில் ஒருவன் புத்தகம்

என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்பு பரிசாக - நன்றி பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்று புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன்.

உங்களில் ஒருவனான என்னுடைய பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக்கூடாது என்பது என் அன்பு கட்டளை. மக்களுக்கு உரிய பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்.

அறிவு புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story