பரபரப்பான சூழ்நிலையில் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி


பரபரப்பான சூழ்நிலையில் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 4:28 AM IST (Updated: 5 March 2022 4:28 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான சூழ்நிலையில் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது தி.மு.க.வினர் சாலைமறியல் செய்தனர். போலீசார் தடியடி நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 5 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு வார்டில் சுயேச்சையும், ஒரு வார்டில் காங்கிரசும் வெற்றி பெற்றன. சுயேச்சை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததால் அக்கட்சியின் பலம் 9 ஆனது. இதன்மூலம் பெரும்பான்மை பெற்ற அ.தி.மு.க. தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டது. இதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு கோரி அ.தி.மு.க.வினர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேர், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஒரு சுயேச்சை ஆகிய 9 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணிக்கே பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திரண்டிருந்த தி.மு.க.வினர், அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியே அனுப்ப வேண்டும் அல்லது தங்களை உள்ளே அனுப்ப வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் தடியடி

அதற்கு போலீசார் தரப்பில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாதுகாப்பாக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறினர். அதற்கு தி.மு.க.வினர், தங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். இப்படியே போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தி.மு.க.வினர் போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி பேரூராட்சி அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் சில தி.மு.க.வினர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் போலீசார் மீது கல்வீச தொடங்கியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். இதனால், தி.மு.க.வினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

8 பேர் காயம்

இந்த தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் 4 போலீசார் உள்பட 8 பேர் காயமடைந்தனர். தடியடி நடத்தி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர் சாலை பொன்னம்மா போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

இதேபோல, மதியம் 2-30 மணியளவில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த திவ்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை அறிந்த தி.மு.க.வினர், மீண்டும் ஒன்றுகூடி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், போலீசாரும், ஒருதலைபட்சமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Next Story