மேகதாது விவகாரம்: கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
“கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அமைத்து 67.16 டி.எம்.சி. நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத்தைத் தயாரித்துள்ள கர்நாடக அரசு, தற்போது நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேகேதாட்டில் அணை கட்டினால், தமிழ்நாட்டிற்கு காவிரியில் சொட்டு நீர் கூட வரத்து இருக்காது. காவிரி பாசனப் பகுதிகளில் வேளாண்மைத் தொழில் முற்றிலும் அழிந்துவிடும் என்பதால், 2013 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு தன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
ஆனால் கர்நாடக பா.ஜ.க. அரசு, மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் அணையைக் கட்டிவிட துடித்துக்கொண்டு இருக்கிறது.
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 16.02.2018 இல் அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு, மேகேதாட்டு அணையைக் கட்டி முடிக்க கர்நாடக அரசு துணிந்ததற்கு மத்திய பாஜக அரசின் நயவஞ்சகப் போக்குதான் காரணம் ஆகும்.
கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்கவோ, முடிவு எடுக்கவோ அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல.
முன்னர் மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற சௌமித்ரகுமார் ஹல்தர், தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இவர் நீர்வளத்துறைச் செயலாளராக இருந்தபோதுதான் மேகேதாட்டு அணை தொடங்க விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் பெற்று, அதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் போதெல்லாம், மேகேதாட்டு அணைத் திட்டத்தை கூட்டத்தின் விவாதப்பொருளாக நிகழ்ச்சி நிரலில் கொண்டுவந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், கர்நாடக மாநில அரசின் நீர்த் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வருவதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.
முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன், முதன் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் , ஜூன் 16, 2021 இல் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, “மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு மத்திஅய் அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று நேரில் வலியுறுத்தினார்.
பின்னர் ஜூலை 12, 2021 இல் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, எந்தக் காரணம் கொண்டும் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 16, 2021 இல் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து, தமிழகத்தின் எதிர்ப்பை எடுத்துக் கூறியது.
மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதால், மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு தற்போது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மத்திய பாஜக அரசு இதில் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story