மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின் உறுதி


மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 8 March 2022 12:32 AM IST (Updated: 8 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்றும், அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாது இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள். ரத்த பேதம் - பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காக போராடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். “பெண் ஏன் அடிமையானாள்?” என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா- கருணாநிதி ஆகியோரது வழி நடைபோடும் நமது ‘திராவிட மாடல்' அரசு, மகளிருக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை - அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இப்போது 40 சதவீதமாக உயர்வு- தொடக்கப்பள்ளிகளில் முழுதும் பெண் ஆசிரியர்கள் நியமனம்-உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு-பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு - மகளிர் சுயஉதவி குழு - இலவச எரிவாயு அடுப்பு- ஈ.வெ.ரா. மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் ஆகியோர் பெயரில் திருமண நிதி உதவி உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் - கல்வி கட்டண சலுகைகள் - நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று பட்டியிலிட்டுக்கொண்டே செல்லலாம். இத்திட்டங்கள் பெண்களுக்கான சமூக - பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்கள்.

துணை நிற்கும்

முன்னத்தி ஏராக தி.மு.க. செயல்படுத்திய திட்டங்கள், இன்றைக்கு நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன. சொற்களால் பெண்களைப் போற்றி செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மிக வேகமாக மாறி வருகிறது. பெண்களது நலனும், உரிமையும் காக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு' என்றும் துணை நிற்கும். அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story