மின் நுகர்வோர்களின் புகார்கள் 99.41 சதவீதம் தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


மின் நுகர்வோர்களின் புகார்கள் 99.41 சதவீதம் தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 8 March 2022 1:17 AM IST (Updated: 8 March 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா சாலையில் 24 மணி நேரம் செயல்படும் மின்சார நுகர்வோர்களுக்கான மின்சார சேவை மையத்தில் (மின்னகம்) பெறப்பட்ட புகார்களில் 99.41 சதவீதம் தீர்வு காணப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

 சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.

முன்னதாக இந்த முகாமை மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். முகாமில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

சேவை மையம்

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் 20-ந் தேதி 24 மணி நேரம் செயல்படும் மின்சார நுகர்வோர் சேவை மையத்தை (மின்னகம்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த சேவை மையத்தை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.

இந்த சேவை மையம் தொடங்கப்பட்டதில் இருந்து நேற்று வரை 6 லட்சத்து 69 ஆயிரத்து 724 புகார்கள் மின்சார நுகர்வோர்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. அதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 790 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு மின்சார நுகர்வோர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இது 99.41 சதவீதமாகும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, விழிப்புப்பணி காவல் துறை இயக்குனர் பி.கே.ரவி, தமிழ்நாடு தொடர் மின் அமைப்புக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிராந்திய தலைவர் டாக்டர் எஸ்.சவுந்தரி மற்றும் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story