சென்னை, ராணிப்பேட்டையில் சோதனை: ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு? வருமானவரித்துறை தகவல்


சென்னை, ராணிப்பேட்டையில் சோதனை: ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு? வருமானவரித்துறை தகவல்
x
தினத்தந்தி 9 March 2022 12:22 AM IST (Updated: 9 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.1,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்து இருக்கலாம் என்று தெரியவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கிய நிதி நிறுவனத்தினர், தொழிலதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள், அவர்களது அலுவலகங்களில், கடந்த 2-ந்தேதியிலிருந்து தொடர்ந்து 4 நாட்கள் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் 250-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பைனான்சியர் சுரேஷ் லால்வானி வீடு, அவரது மகன் வீடு மற்றும் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு?

அதேபோல், ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளரும், தொழிலதிபருமான, ஏ.வி. சாரதியின் வீடு மற்றும் அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்தது. இந்த சோதனையில் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1,000 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.3 கோடிக்கு மேல் ரொக்கம், 8 கிலோவுக்கு மேல் தங்கம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. கணக்கில் காட்டப்படாத வருவாயை கொண்டு, ரியல் எஸ்டேட், சினிமா தயாரிப்பு போன்றவற்றில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முழுவதும் நிறைவடைந்த பின்னர், ஓரிரு நாட்களுக்கு பிறகுதான் முழுமையாக வரி ஏய்ப்பு செய்தது எவ்வளவு, ரொக்கம், தங்கம் பறிமுதல் விவரங்களும் முழுமையாக தெரியவரும்.

மேற்கண்ட தகவல்களை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story