துணை நடிகை கத்திமுனையில் கற்பழிப்பு 2 பேர் கைது


துணை நடிகை கத்திமுனையில் கற்பழிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 2:26 AM IST (Updated: 11 March 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

துணை நடிகையிடம் நகை, பணம் பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக கொள்ளையர்கள் கத்திமுனையில் நடிகையை கற்பழித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ஏ.கே.ஆர். நகரில் 35 வயதான சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர், பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். கணவரை பிரிந்து அவர் மட்டும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் 2 பேர், இவரது வீட்டின் கதவை தட்டினர். துணை நடிகை கதவை திறக்கவும், அவரை வீட்டுக்குள் தள்ளியபடி உள்ளே புகுந்த மர்மநபர்கள், கத்திமுனையில் மிரட்டி துணை நடிகையிடம் 10 கிராம் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறித்தனர். மேலும் நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோவும் எடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

2 பேர் கைது

இதுபற்றி துணை நடிகை அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வளசரவாக்கத்தை சேர்ந்த செல்வக்குமார் (22), அவரது நண்பரான கண்ணதாசன் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கொள்ளையர்கள் இருவரும் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

மிரட்டி கற்பழிப்பு

கைதான கண்ணதாசன் துணை நடிகைக்கு ஏற்கனவே பழக்கமான நண்பர் ஆவார். அடிக்கடி துணை நடிகை வீட்டுக்கு சென்று அவருக்கு மீன் வாங்கி கொடுப்பார். அப்போது துணை நடிகை மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையும், அவரிடம் நகை, பணம் அதிகளவில் இருப்பதையும் தெரிந்து கொண்டார்.

தனக்கு பணம் தேவைப்பட்டதால் துணை நடிகையிடம் நகை, பணத்தை பறிக்கும் நோக்கத்தில் சம்பவத்தன்று கண்ணதாசன், தனது நண்பரான செல்வக்குமாரை நடிகையின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கதவை தட்டினார். நடிகை கதவை திறந்ததும், அவரை வீட்டுக்குள் தள்ளி கதவை உள்புறமாக பூட்டினர். பின்னர் கத்திமுனையில் துணை நடிகையை இருவரும் கற்பழித்தனர்.

ஆபாச வீடியோ

மேலும் இதனை வெளியே சொல்லாமல் இருக்க துணை நடிகையை தங்கள் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துவிட்டு, அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்து சென்றுவிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் துணை நடிகையை கற்பழித்ததுடன், ஆபாச வீடியோவும் எடுத்து இருப்பதால் இதுபற்றி அவர் போலீசில் சொல்லமாட்டார் என இருவரும் நினைத்து இருந்தனர். ஆனால் தற்போது நடிகை அளித்த புகாரில் 2 பேரும் கைதாகி உள்ளனர்.

கைதான 2 பேர் மீதும் கற்பழிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகையிடம் பறித்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story