புளியங்குடியில் பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை


புளியங்குடியில் பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2022 4:57 PM GMT (Updated: 12 March 2022 4:57 PM GMT)

புளியங்குடியில் பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

கல்லூரி மாணவி

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியைச் சேர்ந்த கணேசன் மனைவி மாடத்தி. இவர்களுடைய மகள் இந்து பிரியா (வயது 18). இவர் புளியங்குடியில் உள்ள மனோ கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கணேசன் இறந்து விட்டதால் மாடத்தி பீடிச்சுற்றி தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் இந்து பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இந்து பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கடிதம் சிக்கியது

அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இந்து பிரியா கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை அவரது வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினார்கள்.

அந்த கடிதத்தில் கூறிஇருப்பதாவது:-

கல்லூரியில் வைத்து நான் செல்போன் பயன்படுத்தியதாக கூறி கல்லூரி பேராசிரியர், பேராசிரியை ஆகிய 2 பேரும் என்னிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி வற்புறுத்தினர். ஆனால், நான் செல்போன் கொண்டு செல்லவில்லை.

மற்றொரு மாணவி தான் செல்போன் வைத்திருந்தார் என்று தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அந்த மாணவியிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்காமல் என்னிடமே எழுதி கேட்டு வற்புறுத்துகிறார்கள்.

காதலிக்கவில்லை

அப்படி இருந்தும் நான் மன்னிப்பு கடிதம் எழுதி தரமாட்டேன் என்று கூறினேன். இதனால் அவர்கள் என்னை அனைவரும் முன்பு திட்டினார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொள்கிறேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரையும் காதலிக்கவில்லை.

இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார், அந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story