பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் திருமாவளவன் பேட்டி


பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2022 2:30 AM IST (Updated: 14 March 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

கோவை,

நடந்த முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ஏற்கனவே ஆட்சியில் இருந்த 4 மாநிலங்களைத்தான் பா.ஜனதா தக்க வைத்துள்ளது. ஆனால் இதை மகத்தான வெற்றி என பா.ஜனதாவினர் தம்பட்டம் அடிக்கிறார்கள்.

பிரதமரே இமாலய வெற்றி என்கிறார். இதை வைத்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். ஆனால் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் சரிவை சந்தித்துள்ளனர். எனவே இது பா.ஜனதாவுக்கு சாதகம் என கூற முடியாது.

மதச்சார்பற்ற கட்சிகள்

பா.ஜனதா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பேசவில்லை. மாறாக மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயலாகும். எனவே இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்டவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்கவும், காங்கிரஸ், இடதுசாரி உள்பட அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பா.ஜனதா வெற்றி பெற்றுவிட கூடாது.

தனி உளவுப்பிரிவு

தமிழகத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். மாநில அரசால் கூட இந்த சட்டம் இயற்ற முடியும். கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு இது போன்ற ஆணவ கொலைகளுக்கு முடிவு கட்டும்.

சாதி, மத மோதல்களை தடுக்க தனி உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக இந்த தனிப்பிரிவை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story