சிறுவன் கத்தியால் குத்திக்கொலை


சிறுவன் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 15 March 2022 3:33 AM IST (Updated: 15 March 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

புழல் ஏரிக்கரை அருகே 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தான். கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றம் சி.கே.மாணிக்கனார் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் நாகராஜ்(வயது 14). இவர், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது தண்ணீர் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த நாகராஜை, நண்பர் ஒருவர் வெளியே அழைத்துச் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நாகராஜை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

கத்தியால் குத்திக்கொலை

இந்தநிலையில் நேற்று காலை புழல் ஏரிக்கரை அருகே சிறுவன் நாகராஜ் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, வயிறு உள்பட உடலின் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. மர்மநபர்கள் அவரை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்குன்றம் போலீசார், கொலையான நாகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுவன் நாகராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டான்? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story