வேளாண்மை பட்ஜெட் என்பது விவசாயிகளை ஏமாற்றும் நாடகம்- எடப்பாடி பழனிசாமி
தமிழக வேளாண்மை பட்ஜெட் என்பது விவசாயிகளை ஏமாற்றும் நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘இது வேளாண் பட்ஜெட் இல்லை’
தமிழக சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே அது பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இது வேளாண்மை பட்ஜெட் இல்லை. வேளாண்மை மானிய கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பைத்தான் அமைச்சர் படித்துள்ளார். இது விவசாயிகளை ஏமாற்றுகிற நாடகம். வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த வேளாண் பட்ஜெட்டில் பல துறைகளை ஒன்றாக சேர்த்து, அந்த துறைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை ரூ.33 ஆயிரம் கோடி என்று இந்த பட்ஜெட்டில் கொண்டு வந்து அறிவித்துள்ளார்கள்.
இந்த வேளாண்மை பட்ஜெட்டில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். தனியாக செயல்படும் இந்த துறைகளில் உள்ள நிதிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்துதான் வேளாண்மை பட்ஜெட் என்று ஒரு மாயையை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
‘ஏமாற்றம் அளிக்கிறது’
இந்த பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்திருந்தால்தான் பெரிய, பெரிய திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு பலன் அளித்திருக்க முடியும். எனவே இந்த வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட்தான்.
இந்த வேளாண்மை பட்ஜெட் ஒரு கண்துடைப்புதான். எந்த ஒரு பெரிய திட்டமும் கிடையாது. இது காற்றிழத்த பலூன்.
1 லட்சம் மூட்டை நெல் வீண்
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வெள்ளத்தில் நெல் பயிர்கள் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இந்த அரசு நிவாணத்தொகை வழங்கவில்லை.
தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்வதில்லை. எனவே வெளியில் வைக்கப்படும் அவற்றின் மீது மழை நீர் பட்டு அவை முளைத்து அனைத்தும் வீணாகிறது. ஒரு லட்சம் மூட்டைகளுக்கு மேலாக நெல் வீணாகிவிட்டது.
நகைக்கடன்
நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக கூறிய தி.மு.க. தேர்தல் அறிக்கையை நம்பி 48 லட்சம் பேர் கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் தற்போது நகையை மீட்க முடியாத சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். 48 லட்சம் பேரில் இந்த அரசு ஆய்வு செய்து 13 லட்சம் பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். மீதி 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது என்று அறிவித்துள்ளார்கள். அந்த 13 லட்சம் பேரையும் மீண்டும் மறுஆய்வு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
பயனாளிகள் தேர்வில் தற்போது அளிக்கும் விளக்கத்தை தேர்தலுக்கு முன்பு தி.மு.க. தெரிவித்திருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காது. மக்களை ஏமாற்றி, வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். பல்வேறு விதிமுறைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு மாடல்
எம்.ஜி.ஆரின் ஆட்சி புரட்சித் தலைவர் மாடல். ஜெயலலிதாவின் ஆட்சி அம்மா மாடல். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாடு மாடல் என்ற மாடலை உருவாக்கினோம். நிர்வாக திறமையின் காரணமாக பல துறைகளில் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளோம். அதுதான் தமிழ்நாடு மாடல்.
ஆனால் தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்துள்ளனர். நாங்கள் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்ட பணிகளுக்கு இவர்கள் அடிக்கல் நாட்டி வருகின்றனர். இதுதான் திராவிட மாடலாம்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்தோம். ஜெயலலிதா கொண்டுவந்த அந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளாக அதை செயல்படுத்தவில்லை என்ற செய்தியை வெளியிடுகின்றனர். அம்மா இருசக்கர வாகன திட்டத்தையும் கைவிட்டுவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story