சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்
சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ.1,000-ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1,500-ஆகவும் வழங்கப்படுகிறது. இதில் கடுமையாக பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.200 உயர்த்தி மாதம் ரூ 1700 உதவித் தொகை வழங்க அரசாணை அண்மையில் வெளியானது.
இந்த நிலையில் புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதந்தோறும் ரூ.3,800, தெலுங்கானாவில் ரூ.3,106 வழங்கப்படுகிறது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவை போல் தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கை பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், இன்றைய தினம் சென்னையில் போராட்டம் நடத்துவதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் நிதி நிலையை பொருத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story