வங்கியில் டெபாசிட் செய்த ரூ.100 கோடி நூதன மோசடி வழக்கில் சென்னை துறைமுக அதிகாரி கைது


வங்கியில் டெபாசிட் செய்த ரூ.100 கோடி நூதன மோசடி வழக்கில் சென்னை துறைமுக அதிகாரி கைது
x
தினத்தந்தி 23 March 2022 12:23 AM IST (Updated: 23 March 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.100 கோடி பணத்தை நூதனமாக மோசடி செய்த வழக்கில் துறைமுக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை துறைமுக சபை சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அந்த டெபாசிட் பணம், அந்த வங்கி கணக்கில் இருந்து, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கணேஷ்நடராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு நூதனமான முறையில் மாற்றப்பட்டது.

கணேஷ்நடராஜன் தன்னை சென்னை துறைமுகத்தின் நிதி பிரிவு துணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அதற்கான ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்து, அதே வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, ரூ.100 கோடி பணத்தை அந்த புதிய கணக்கிற்கு மாற்றி, அதில் இருந்து ரூ.45 கோடி எடுத்து ஏப்பம் போட்டுவிட்டதாக புகார் எழுந்தது. இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில், வங்கி கணக்கில் மீதி இருந்த ரூ.55 கோடி பணத்தை சுருட்ட விடாமல் முடக்கி விட்டனர்.

கைது நடவடிக்கை

இந்த மெகா மோசடி குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, முக்கிய குற்றவாளியான கணேஷ்நடராஜன், இடைத்தரகர் மணிமொழி, செல்வகுமார் என்ற செல்வம், ஜாகீர் உசேன், விஜய்ஹெரால்டு, ராஜேஷ்சிங், ஸ்ரீசியாத், சுடலைமுத்து என்ற அண்ணாச்சி மற்றும் வங்கி மேலாளர் சேர்மதிராஜன் போன்றோரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்கள்.

இந்த வழக்கில் கேமரூன் நாட்டைச் சேர்ந்த பவுசியாமோ ஸ்டீவ், கோங்கோ நாட்டைச் சேர்ந்த முசாசா இலுங்கா ஆகிய இருவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் மாணவர்கள் என்று கூறி விசா எடுத்து, சென்னை ராமாவரம் பகுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்த மோசடிக்கு இவர்கள் இருவரும் உறுதுணையாக செயல்பட்டுள்ளதாக சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர்.

அமலாக்கப்பிரிவு அதிரடி

இந்த வழக்கை அமலாக்கத்துறையினரும் விசாரித்தார்கள். அவர்கள் தனியாக வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சோதனை போட்டனர். ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக சுடலைமுத்து, விஜய்ஹெரால்டு, ராஜேஷ்சிங், ஸ்ரீசியாத், ஜாகீர்உசேன், சுரேஷ்குமார், கணேஷ்நடராஜன், மணிமொழி, செல்வகுமார், வங்கி மேலாளர் சேர்மதிராஜன், அருண்அன்பு ஆகிய 11 பேரை அமலாக்கத்துறையினர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

துறைமுக அதிகாரி கைது

இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசாரும், அமலாக்கத்துறையினரும் மாற்றி, மாற்றி அதிரடி நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே 2 வெளிநாட்டினர் உள்பட 11 பேரை கைது செய்த சி.பி.ஐ. போலீசார், நேற்று முதன் முதலாக சென்னை துறைமுக அதிகாரி ஒருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முறைகேடு நடந்த சென்னை துறைமுகத்தில் உள்ள அதிகாரிகளை இதுவரை சி.பி.ஐ. கை வைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று கைது செய்யப்பட்ட துறைமுக அதிகாரியின் பெயர் ரகுபெர்னார்டு என்பதாகும். அவர் துறைமுகத்தில் உதவி சூப்பிரண்டாக பணியில் உள்ளார் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரூ.100 கோடி மோசடிக்கு ரகுபெர்னார்டு உடந்தையாக செயல்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.

Next Story