மாணவிகளின் வருகை பதிவேட்டில் திருத்தம்: பல் மருத்துவ கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதம்


மாணவிகளின் வருகை பதிவேட்டில் திருத்தம்: பல் மருத்துவ கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதம்
x
தினத்தந்தி 23 March 2022 12:28 AM IST (Updated: 23 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

சாதகமான தீர்ப்பை பெறவேண்டும் என்பதற்காக மாணவிகளின் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்த மாதா பல் மருத்துவ கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

சென்னை, குன்றத்தூரில் உள்ள மாதா பல் மருத்துவ கல்லூரியில் கடந்த 2013-14-ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற மாணவி அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்தை செலுத்தியிருந்தார். ஆனால் அவரிடம் கூடுதலாக ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை நிர்வாக கட்டணமாக வசூலித்துவிட்டு மீண்டும் கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை பயிற்சி பெற விடாமல் தடுத்து, படிப்பு நிறைவு சான்றிதழ் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை

இதேபோல, அதே கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவி ரம்யா பிரியாவிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டதால், அவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, கல்லூரி நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்கலைக்கழக குழு அளித்த அறிக்கையில், மாணவிகளிடமும் கல்லூரி நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.

ரூ.3 கோடி அபராதம்

இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எதிராகவும், தங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு பெற வேண்டும் என்பதற்காக கல்லூரி நிர்வாகம் அந்த இரு மாணவிகளின் வருகை பதிவேட்டையும் திருத்தி அதை இந்த ஐகோர்ட்டில் கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கிறேன். கல்லூரி நிர்வாகம் இந்த தொகையை 8 வாரங்களில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் செலுத்த வேண்டும். அந்த தொகையை ஏழை, எளிய மருத்துவ மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பல்கலைக்கழகம் பயன்படுத்த வேண்டும்.

மாணவிகளுக்கு இழப்பீடு

அதேபோல, வழக்கு தொடர்ந்துள்ள இரு மாணவிகளிடம் கூடுதலாக வசூலித்துள்ள தொகையை 18 சதவீத வட்டியுடன் கல்லூரி நிர்வாகம் ஒரு மாதத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். மேலும் இந்த மாணவிகளுக்கு தலா ரூ.24 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும்.

வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய பயோ-மெட்ரிக் முறையை பின்பற்ற பல்கலைக்கழகம் உத்தரவிட வேண்டும். அத்துடன் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இந்த பல் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல் மருத்துவ கவுன்சிலும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story