மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த 6 நாட்டு ராணுவ கல்லூரி அதிகாரிகள்....!


மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த 6  நாட்டு ராணுவ கல்லூரி அதிகாரிகள்....!
x
தினத்தந்தி 23 March 2022 4:45 PM IST (Updated: 23 March 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா உட்பட 6 நாட்டு ராணுவ கல்லூரி அதிகாரிகள் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த உள்ளனர்.

மாமல்லபுரம், 

இந்தியா, ஆஸ்திரேலியா, பூடான், நேபாளம், ஈரான், உஸ்பெக்கிஸதான் ஆகிய நாடுகளை சேர்ந்த ராணுவக்கல்லூரியில் விமானப்படை, கப்பல் படை, ராணுவப்படை ஆகிய முப்படையில் சேர பயிற்சி அளிக்கும் உயர் அதிகாரிகள் 16 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி காரில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். 

முன்னதாக கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த 6 நாடுகளை சேர்ந்த முப்படை பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் 16 பேரை திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் ராஜாராமன் மற்றும் வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டு ரசித்தனர்.

கடற்கரை கோயிலின் இரு கருவரைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். பிறகு அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது உடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது.

கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் கடற்கரை கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் எப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக அவர்களிடம் விளக்கி கூறினார்.  அவரிடம் முப்படைகளில் உயர் அதிகாரிகள் 16 பேரும் கடற்கரை கோயிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர். 

இறுதியில் கடற்கரை கோயிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர்கள் அனைவரும் அங்கு ஒரு குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

 6 நாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகளின் வருகையை முன்னிடடு மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

1 More update

Next Story