2024-ம் ஆண்டிற்குள் பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப் கார் திட்டம் நிறைவேற்றப்படும்


2024-ம் ஆண்டிற்குள் பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப் கார் திட்டம் நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 24 March 2022 12:18 AM IST (Updated: 24 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

2024-ம் ஆண்டிற்குள் பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப் கார் அமைக்கும் திட்டம் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் (கோவை வடக்கு), ‘மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு கம்பிவட ஊர்தி வசதி செய்து தரப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு, ‘மருதமலை முருகன் கோவிலுக்கு கம்பி வட ஊர்தி அமைக்க மண் பரிசோதனை செய்யும் போது, அங்கே கம்பி வட ஊர்தி அமைக்க முடியாத நிலை உள்ளது' என்றார்.

இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜூனன், ரோப் கார் அமைக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படுமா என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு, ஏற்கனவே கோவிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். 3 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கு மின் தூக்கி அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதத்திற்குள் இந்த பணிகளை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பார் என்றார்.

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜூனன், ‘அமைச்சர் இங்கு உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3.40 கோடி ரூபாயில் டெண்டர் கோரப்பட்டு, மின் தூக்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் மின் தூக்கி அமைக்க நீங்கள் டெண்டர் விட்டது போல பேசுகிறீர்கள் என்று கூறினார்.

டெண்டர்

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு வேண்டாம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம். பிப்ரவரி 26-ந்தேதி செயல்பாட்டிற்கு வராத பணிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து விட்டார். நான் சொன்னதை உறுப்பினர் சரியாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன். மருதமலையில் கம்பி வட ஊர்தி அமைக்க முடியாது. அங்கு மண் வலிமையாக இல்லை.

இதனால் மின் தூக்கி அமைக்க டெண்டர் விடப்பட்டது. சிங்கிள் டெண்டர் என்பதால் உங்கள் ஆட்சியிலேயே அது கைவிடப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் அங்கு கள ஆய்வு நடத்தினோம். அதன்பின் அங்கு மின் தூக்கி அமைக்க டெண்டர் மீண்டும் விடப்பட்டது. கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மின் தூக்கி செயல்பாட்டிற்கு வரும்.

பழனி முருகன் கோவில்

2016-ல் பழனி முருகன் கோவிலில் அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது ரோப்கார் அமைக்க 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு வரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

18 மாதத்திற்குள் பணிகள் முடித்துத்தரப்படும் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டிற்குள் பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப் கார் அமைக்கும் திட்டம் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில்

தி.மு.க. உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி உச்சிப் பிள்ளையார் மலைகோட்டை கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்து தருவதற்கான அறிவிப்பு இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, ‘திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மட்டுமல்ல, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை ஆகிய 3 கோவில்களுக்கும் ரோப் கார் வசதி செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவரால் (இனிகோ இருதயராஜ்) திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற முடியவில்லை. அவருக்காகவாவது நிச்சயம் அந்த மலை கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்யப்படும்' என்றார்.

Next Story