கோவில்களுக்கு செலுத்தவேண்டிய வாடகை ரூ.142 கோடி வசூல் அமைச்சர் சேகர்பாபு தகவல்


கோவில்களுக்கு செலுத்தவேண்டிய வாடகை ரூ.142 கோடி வசூல் அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 24 March 2022 2:11 AM IST (Updated: 24 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகைகள் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் ரூ.142 கோடியே 23 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 1-ந்தேதி அன்று முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை மற்றும் குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

நடப்பு பசலி ஆண்டான 1431, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வரை ரூ.142 கோடியே 23 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

10 முக்கிய கோவில்கள்

அதிக வசூல் செய்த 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.4.72 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சாமி கோவிலில் ரூ.3.48 கோடியும், சென்னை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ரூ.2,41 கோடியும், பூங்காநகர் ஏகாம்பரேசுவரர் கோவிலில் ரூ.2.31 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் ரூ.2.26 கோடியும்.

சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் ரூ.1.90 கோடியும், சென்னை பாடி திருவல்லீசுவரர் கோவிலில் ரூ.1.73 கோடியும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரர் கோவிலில் ரூ.1.36 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ரூ.1.33 கோடியும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ரூ.1.33 கோடியும், இதுவரை வசூலிக்கப்பட்டு உள்ளது.

கோவில் வளர்ச்சிக்கு உதவி

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை மற்றும் குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே, கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

Next Story