வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு: ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை


வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு: ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
x
தினத்தந்தி 29 March 2022 12:19 AM IST (Updated: 29 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு: ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்களும், மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதை போக்க தமிழக அரசும், போக்குவரத்துத்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கடமை தவறிய செயல் ஆகும். தமிழக அரசு நினைத்திருந்தால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து இருக்கலாம். ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறிய போதிலும் அதையும் அதிகாரிகள் ஏற்கவில்லை.

அதன்படி பார்த்தால் மக்களின் அவதிக்கு அரசும் மறைமுக காரணம் என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-வது திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அந்த தேர்வுகளில் பெரும்பான்மையான மாணவர்களால் பங்கேற்கமுடியவில்லை. வேலை நிறுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு இருந்தால், குறைந்தபட்சம் தேர்வுகளை ஒத்திவைத்து விட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்திருக்கலாம். தமிழக அரசின் வெற்றியைவிட தொழிற்சங்கத்தின் வெற்றியையே ஆட்சியாளர்கள் முக்கியமாக கருதியதால்தான் பொதுமக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது.

இது முற்றிலும் தவறு. தமிழக அரசு அதன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். பேருந்து சேவையை மேம்படுத்தவேண்டும். திருப்புதல் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story