ஐகோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் வாழ்த்து


ஐகோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் வாழ்த்து
x
தினத்தந்தி 29 March 2022 2:11 AM IST (Updated: 29 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் 2 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டுக்கு, வக்கீல்கள் என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளை அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தும், வரவேற்றும் பேசினர்.

கனவு மெய்படும்

இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் பேசினர். நீதிபதி என்.மாலா, "எனது குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை வக்கீல். சட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்ய `கவுன்' தைக்கும்போது ஒருசில மாறுதல்களை செய்யும்படி டெய்லரிடம் கூறினேன். அதற்கு அந்த டெய்லரோ அதெல்லாம் மூத்த வக்கீல்கள், நீதிபதிகள் அணியக்கூடிய கவுன். அதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றார். அப்போதே நீதிபதியாக வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி இப்போது நீதிபதியாக நிற்கிறேன். இளம் வக்கீல்கள் கனவு காணுங்கள். அந்தக்கனவை நிறைவேற்ற கடினமாக உழையுங்கள். கனவு மெய்ப்படும்" என்று பேசினார்.

தந்தையின் அறிவுரை

நீதிபதி எஸ்.சவுந்தர் பேசும்போது, ‘‘நீதிபதி பதவிக்கு என்னைப் பரிந்துரை செய்த அனைத்து நீதிபதிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை ஆர். சிவபுண்ணியம் மயிலாடுதுறையில் வக்கீலாக உள்ளார். நான் வக்கீல் தொழிலை மயிலாடுதுறையில்தான் தொடங்கினேன். ஆனால், எனது தந்தை தான் என்னை சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைத்து நீயும் ஒருநாள் அந்த வளாகத்தில் நீதிபதியாக வலம் வரவேண்டும் என வாழ்த்தினார். அவருடைய அறிவுரைதான் என்னையும் நீதிபதியாக்கி உள்ளது. " என்றார்.

எண்ணிக்கை உயர்ந்தது

இந்தநிகழ்ச்சியில், அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் பி.முத்துக்குமார், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். ஐகோர்ட்டு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். 2 புதிய நீதிபதிகள் பதவியேற்றதை தொடர்ந்து ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆகவும், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆகவும் உயர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் 14 ஆக குறைந்துள்ளது.


Next Story