ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 March 2022 4:37 AM IST (Updated: 31 March 2022 8:22 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் தற்கொலை செய்துகொண்டதன் காரணமாக சட்டம் கொண்டுவரப்பட்டு, இந்த விளையாட்டு சில மாதங்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருந்தது. தற்போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இளைஞர்கள் நாட்டம்

அந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் வெற்றி அடைபவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக விளையாட்டு துறையினரும், திரைப்பட துறையினரும் விளம்பரம் செய்வதன் காரணமாக இளைஞர்கள் இதில் நாட்டம் செலுத்துகின்றனர்.

எனவே இந்த விளையாட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 1968-ம் ஆண்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மேற்கோள் காட்டி இந்த ஆன்லைன் விளையாட்டு சூதாட்டம் அல்ல, திறமையை வளர்க்கும் விளையாட்டு என்று விளையாட்டினை நடத்தும் நிறுவனங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது திறன் விளையாட்டாக இருந்தால், இதில் உள்ள அபாயங்கள் குறித்து விளம்பரத்தில் ஏன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது?.

தடை விதிக்க நடவடிக்கை

இந்த நிலைமை தொடர்ந்தால், இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பை தேடுவதிலும் நாட்டம் செலுத்துவதை தவிர்த்து, இதுபோன்ற அடிமைத்தனத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை-எளிய, நடுத்தர மக்கள்தான். இதுபோன்ற விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

எனவே, முதல்-அமைச்சர், இதில் உடனடியாக தலையிட்டு ஆன்லைன் மூலம் விளையாடப்படும் விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story