மத்திய பல்கலை கழக பொது நுழைவு தேர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
நாட்டில் மத்திய பல்கலை கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவு தேர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
நாட்டிலுள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவு தேர்வு மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. இதன்படி, யு.ஜி.சி. மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசின் கீழ், மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவு தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு வரை 14 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதனை ஏற்று கொண்டன. இதனால், இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், 45 மத்திய பல்கலைக்கழகங்களும் பின்பற்றுவது தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவு தேர்வின் அவசியம் பற்றி பரிந்துரைக்கும் புதிய தேசிய கல்வி கொள்கையின் அறிவிப்புக்கு பின் இது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், மத்திய பல்கலை கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவு தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதில், மாணவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு எந்த பங்கும் இருக்காது. அவர்களது மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடைபெறும். இதனால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
எனினும், வெவ்வேறு வாரியங்களால் ஏற்று கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் பன்முகத்தன்மை உள்ள சூழலில், மாணவர்கள் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு வாரிய மதிப்பெண்கள் பயன்படுத்துவதற்கு அரசு விரும்பவில்லை.
இதுதவிர, சில கல்வி வாரியங்கள் மற்றவர்களை விட தாராளமாக மதிப்பெண்கள் வழங்குகின்றன. இது, அனைத்து வாரியங்களில் பயிலும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட வாரியங்களில் பயிலும் மாணவர்களுக்கு நியாயமில்லாத கூடுதல் நன்மையாக அமைகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story