இணைய வழி இலவச வீட்டுமனை பட்டாக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


இணைய வழி இலவச வீட்டுமனை பட்டாக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 5 April 2022 4:27 AM IST (Updated: 5 April 2022 4:27 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குறவர், இருளர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் இன மக்களுக்கு இணைய வழி இலவச வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2 லட்சத்து 35 ஆயிரத்து 890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41 ஆயிரத்து 573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு இணையவழி பட்டாக்களை வழங்கினார்.

கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஏற்கனவே தனிநபர்களிடம் இருந்து நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தது.

சிறப்பு நடவடிக்கை

இந்நிலையில், அந்த விவரங்கள் கிராம வருவாய் ஆவணங்களில் முறையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அப்பயனாளிகள் தங்களது நிலங்களுக்கான நில உரிமை ஆவணங்களை முழுமையாக பெற இயலாதநிலை இருந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அப்பயனாளிகளின் விவரங்களை தமிழ் நில இணைய ஆவணங்களில் பதிவு செய்து, இணையவழி பட்டா (இ-பட்டா) வழங்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 11 ஆயிரத்து 873 ஹெக்டேர் ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களும், சுமார் 2,668 ஹெக்டேர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிலங்களும் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன.

இணைய வழி பட்டாக்கள்

அவற்றுள் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிலங்களில் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 890 பயனாளிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த நிலங்களில் 41 ஆயிரத்து 573 பயனாளிகளும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 463 பயனாளிகள் வீடுகட்டி வசித்து வருகிறார்கள்.

மேலும், புதிய பயனாளிகளை கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நேர்வில் 31-3-2022 வரை மொத்தம் 43 ஆயிரத்து 911 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022-2023-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க மீதமுள்ள 2 லட்சத்து 33 ஆயிரத்து 552 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் டி.ஜி.வினய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு 69 புதிய வாகனங்கள்

2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், அலுவலர்களுக்கு 108 வாகனங்கள் ரூ.8 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், செயற் பொறியாளர்களுக்கு ரூ.5 கோடியே 8 லட்சம் செலவில் 69 புதிய வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், இந்துசமய அறிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் இரா.கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story