சிவகங்கையில் வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் கட்டிய நபர்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனது வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் முத்து(வயது 82). ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான இவர், அவரது தோட்டத்தில் தனது வளர்ப்பு நாய் ‘டாம்’ நினைவாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.
இது குறித்து முத்து கூறுகையில், தனது வளர்ப்பு நாய்க்கு ‘டாம்’ என்று பெயரிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வளர்த்து வந்ததாகவும், தனது குழந்தையை விட அதிகமாக அதை நேசித்ததாகவும் கூறுகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2021 ஜனவரி மாதம் டாம் உயிரிழந்துள்ளது.
இதையடுத்து தனது வளர்ப்பு நாய்க்கு கோவில் கட்ட முத்து முடிவு செய்துள்ளார். இதற்காக தனது சேமிப்பு பணத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை எடுத்து, ‘டாம்’ நினைவாக மார்பில் சிலை ஒன்றை செய்துள்ளார். அந்த சிலையை முத்து தனக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுவியுள்ளார்.
முத்துவின் மகன் மனோஜ் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் இதற்கு ஆதரவாக இருந்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ தினங்களில் தங்கள் வளர்ப்பு நாயின் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வளர்ப்பு நாயின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Related Tags :
Next Story