“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்


“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2022 5:28 PM IST (Updated: 6 April 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சொன்னதைச் செய்வோம் எனச் சொல்லி பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக, சொல்லாததை செய்கின்ற அரசாக, மக்கள் விரோதச் செயல்களை மேற்கொள்கின்ற அரசாக, விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கின்ற அரசாக, மொத்தத்தில் மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது.

திமுக அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்று பதினோறு மாதங்கள் கடந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 95 காசுக்கும், டீசல் விலை 101 ரூபாய் 04 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 78 காசும், டீசல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் 39 காசும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலையினை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையினை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்ததாலும், தமிழக அரசு பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்ததாலும் இந்த நிலைமை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தாலும், இன்றைய நிலவரப்படி மதிப்புக் கூட்டு வரி மூலம் மாநில அரசிற்கு வரும் வருமானம் தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதேபோல டீசல் விலையிலும் மதிப்புக் கூட்டு வரி மூலம் வருமானம் கூடிக் கொண்டே போகிறது. இது தவிர, இரட்டை டீசல் விலைக் கொள்கை மூலம் மேலும் கூடுதல் வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாய் 18 காசு என்று இருக்கின்ற போது, டீசல் விலை லிட்டருக்கு 83 ரூபாய் 18 காசு என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது இது அனைத்துத் தரப்பு மக்களையும் அதிகமாக பாதிக்கிறது என்று அறிவிக்கை விட்ட எதிர்க்கட்சித் தலைவர், முதல்வரான பிறகு, வாக்குறுதி கொடுத்து விட்டோமே என்பதற்காக பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய் குறைத்துவிட்டு அது பற்றி பேசுவதைக் கூட நிறுத்திவிட்டார்.

அப்போது மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் இன்றைக்கு மாநில அரசு சார்பிலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசையும் வற்புறுத்தாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறார். இரட்டை டீசல் விலையைக் கூட தட்டிக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் என்ன? மாநில அரசுக்கு கூடுதலாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

மாநில அரசுக்கு கூடுதல் வருமானம் வந்தால் சரி, மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ற நிலையில் திமுக அரசு இருக்கிறது போலும்! அதனால்தான், மக்கள் மீது எந்தெந்த வரிகளை போடலாம், எந்தெந்த வரிகளை உயர்த்தலாம், மக்களிடமிருந்து எந்தெந்த வழியில் பணத்தை பெறலாம், எந்தெந்த மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறது திமுக அரசு.

திமுக அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மீதுள்ள அக்கறையின்மையையும், ஈவு இரக்கமற்ற தன்மையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த நிலைமை நீடித்தால் வாகனக் கட்டணங்கள் உயர்ந்து, அதன் விளைவாக விலைவாசி உயரும் சூழ்நிலை ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படக் கூடும்.

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் ஏறிக் கொண்டிருக்கின்ற நிலையில், பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வருகின்ற வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதைக் கருத்தில் கொண்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் விலையை மேலும் இரண்டு ரூபாய் குறைக்கவும், டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கவும், மத்திய அரசின் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான அழுத்தத்தைக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story