சென்னை, சுற்றுவட்டார நீர்நிலை ஆக்கிரமிப்பு துணைக்கோள் மூலம் கண்காணிப்பு


சென்னை, சுற்றுவட்டார நீர்நிலை ஆக்கிரமிப்பு துணைக்கோள் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 April 2022 4:45 AM IST (Updated: 7 April 2022 4:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார நீர்நிலை ஆக்கிரமிப்புகளை துணைக்கோள் மூலம் கண்காணிப்பதற்கான செயலி உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறையின் அமைச்சர் துறைமுருகன் பதில் அளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு உப வடிநிலங்களில் போரூர், புழல், செம்பரம்பாக்கம், வெள்ளிவாயல், மணலிபுதுநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க 8 வெள்ளத்தணிப்பு பணிகள் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல், போரூர் ஏரியில் இருந்து ராமாபுரம் ஏரி வரை மூடுகால்வாய் அமைக்கும் பணி; பள்ளிக்கரணை அணை ஏரி முதல் சதுப்புநிலம் வரை பெரிய மூடுகால்வாய் அமைக்கும் பணி; கொளத்தூர் ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, உபரிநீர் கால்வாயை மேம்படுத்தும் பணி;

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் கால்வாய், அடையாறு கலக்கும் இடத்தில் இருந்து அனகாபுத்தூர் பாலம் வரை அடையாற்றை அகலப்படுத்தும் பணி; போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் மற்றும் நீரொழுங்கியை மேம்படுத்தும் பணி; குன்றத்தூர் வட்டம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் கூடுதலாக பெட்டி வடிவிலான சிறு பாலம் அமைக்கும் பணி;

கொலுத்துவான்சேரி சாலையில் தத்திக்கால்வாயில் இருந்து போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் வரை புதிதாக மூடுகால்வாய் அமைக்கும் பணி; பொன்னேரி வெள்ளிவாயல் கொசஸ்தலை ஆற்றின் வலதுகரையில் மறுசீரமைப்பு, புதிய கரை அமைத்தல், ஆற்றுப்படுகை சீரமைக்கும் பணி; எடையான்சாவடி, சடையான்குப்பம், மணலிபுதுநகர் அருகே மறுசீரமைப்பு, புதிய கரை அமைத்தல் பணி; கொசஸ்தலை ஆற்றின் இடதுகரையில் எடையான் சாவடி அருகே மறுசீரமைப்பு மற்றும் புதிய கரை அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இணைப்பு கால்வாய்

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கோவளம் உப வடிநிலத்தில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க 4 வெள்ளத்தடுப்பு பணிகள் 2-ம் கட்டமாக நடத்தப்படும்.

அதன்படி, ஒட்டியம்பாக்கம் கால்வாய் மற்றும் மதுரப்பாக்கம் வடிகால் முதல் பள்ளிக்கரணை சதுப்புநிலம் வரை துரித வெள்ளக்கால்வாய் அமைக்கும் பணி; ஒட்டியம்பாக்கம் ஏரியில் இருந்து அரசன்கழனி ஏரி வரை விடுபட்ட கால்வாயை அகலமான வடிகால் மூலம் பள்ளிக்கரணை கழுவேலியில் இணைக்கும் பணி; ஒக்கியம் மடுவை கே.சி.ஜி. கல்லூரி முதல் பக்கிங்காம் கால்வாய் வரை தூர்வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணி; ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வீராங்கால் ஓடை வரை உள்ள இணைப்பு கால்வாயை மேம்படுத்தும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு வடிநில பாசனக் கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் மறுசீரமைப்பு செய்ய வெளிப்புற நிதியுதவி பெற ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

ஆக்கிரமிப்பு கண்காணிப்பு

செயற்கை நுண்ணறிவு மற்றும் துணைக்கோள் உதவியுடன் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கவும், நீரின் தன்மையை ஆராயவும் செயலி உருவாக்கப்படும். சென்னைக்கு கூடுதல் நீர் வழங்குதல், வெள்ளத்தணிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முன்னோடி திட்டத்துக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்.

நிலத்தடி நீர் இருப்பைக் கண்டறியவும், மேப் தயாரிக்கவும் டென்மார்க் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை அடிப்படையில் திட்டம் மேற்கொள்ளப்படும். நீரின் தரத்தை நீர்நிலைகளிலேயே கண்காணிக்க ஏதுவாக 400 நீர்த்தன்மை ஆய்வு உபகரணத் தொகுப்புகள் கொள்முதல் செய்யப்படும்.

தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசன கட்டுமானங்களில் பராமரிப்பை மேம்படுத்தும் வகையில் தென்னைநார்ப் பாய் மற்றும் புவி செயற்கை இழை போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி 2 முன்னோடி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

காஞ்சீபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 5 இடங்களில் புதிய அணைக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பாசனக்கட்டுமானம்

தென்காசி, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 3 புதிய நீரொழுங்கிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் 15 இடங்களில் பாசனக் கட்டுமானங்களை புனரமைக்கும் பணிகள் ரூ.251 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அதன்படி, பொன்னேரி வட்டம் பெரும்பேடு குப்பம் அருகே ஆரணியாற்றின் இடதுபுறம் வெள்ளக்கரையில் நீர் உள்வாங்கி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், சேலம், திருப்பூர், திருவள்ளூர், வேலூர், திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் 10 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story