பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு


பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 April 2022 5:20 AM IST (Updated: 7 April 2022 5:20 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

2022-2023-ம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி.) மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

மேலும், பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்' தேர்வை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் நுழைவுத்தேர்வை கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சி இது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. மத்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கை இதனை தெளிவாக நிரூபணம் செய்துள்ளது.

பாதகமான நிலையை ஏற்படுத்தும்

நீட் தேர்வை போலவே இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்த நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட எந்தவொரு நுழைவுத்தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள். இந்த மாணவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவினரை சேர்ந்தவர்களாவர்.

எனவே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்த சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்பு கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும்.

அச்சம்

நீட் தேர்வை போலவே, பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வும், கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதோடு, மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் மேலும் புற்றீசல் போன்று வளரமட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முறையினை பின்பற்றுவதற்கு, பல்கலைக்கழக மானியக்குழு கொண்டுள்ள மறைமுக அழுத்தம், மத்திய பல்கலைக்கழகங்கள் அல்லாதவற்றின் மீது மாணவர்களின் சேர்க்கையை மையப்படுத்தும் செயல்முறையை இன்னும் வலிமையாக்கும் என்று கருதுகிறோம்.

திரும்ப பெறவேண்டும்

காலப்போக்கில் இது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் விலையுயர்ந்த பள்ளிகளை தேர்வுசெய்ய மாணவர்களை தள்ளுவதன் மூலம், மாநில பாடத்திட்ட அடிப்படையிலான பள்ளிக்கல்வி முறையை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத்தேர்வை கட்டாயமாக்கும் இந்த நடவடிக்கை, மாநில அரசுகளின் பங்கினையும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பள்ளிக்கல்வி முறையின் முக்கியத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சிக்கும் மத்திய அரசின் தற்போதைய போக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற்றிடவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story