மின் தடை ஏற்படாமல் தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 7 April 2022 2:06 PM IST (Updated: 7 April 2022 2:06 PM IST)
t-max-icont-min-icon

மின் தடை ஏற்படாமல் தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பைக் கண்காணிப்பது, தேவைக்கேற்ப அவற்றை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெற முடியவில்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது ஆகியவை மாநில அரசின் இன்றியமையாத கடமையாகும். ஆனால், இந்த பொறுப்பை உணராமல், வெற்றி என்றால் அதற்கு தி.மு.க.தான் காரணம் என்றும், பிரச்சினை என்றால் பிறர் மீது பழி போடுவதும் தி.மு.க.விற்கு வாடிக்கையாகிவிட்டது.

உதாரணமாக, கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் பொருட்டு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சி வந்த பிறகும் அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் குறைவாக போடப்பட்டது என்றும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் அதிகமாக போடப்பட்டது என்றும் தம்பட்டம் அடிக்கப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், தடுப்பூசிக்கு எதிராக தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளால் செய்யப்பட்ட பிரச்சாரங்களை மறைத்து, இந்த விளம்பரத்தை தி.மு.க, மேற்கொண்டது. இது மட்டுமல்ல. இந்தத் திட்டம் மத்திய அரசினுடைய திட்டம். மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியைதான் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்கான முழுக் காரணமே தி.மு.க. என்பதுபோல் விளம்பரப்படுத்தப்படுகிறது.

இதேபோன்று, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன், அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்க இரு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் பேசி அனைவரையும் பத்திரமாக இந்திய நாட்டிற்கு அழைத்து வந்தார்கள். ஆனால், புது டெல்லிக்கு தி.மு.க அரசு, சார்பில் நான்கு பேரை அனுப்பிவிட்டு, அவற்றை தி.மு.க. செய்ததாக விளம்பரம் செய்யப்பட்டது.

அதே சமயத்தில் பிரச்சனை என்றால், பிறர் மீது பழியை சுமத்தும் முயற்சியில் தி.மு.க. ஈடுபடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் கடன் நிலவரம், நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை என அனைத்துமே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதையெல்லாம் தெரிந்து வைத்துதான் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரித்து, அதனை மக்களிடையே எடுத்துச் சென்று, அதன்மூலம் ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதிகளைப் பற்றி கேட்டால், தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பழி போடுகிறது தி.மு.க. அரசு.

தற்போது நிலக்கரி பிரச்சனையில் மத்திய அரசு மீது தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும், இதற்குக் காரணம் ஓடிசாவிலிருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவும், தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதன் விளைவாக ஏற்பட்டுள்ள மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாகவும் பல இடங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம், அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள எரிசக்தித்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் மின் தேவை 17,300 மெகாவாட். இதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்றும் ஆனால் மத்திய அரசு 48 ஆயிரம் டன் நிலக்கரியைதான் வழங்குகிறது என்றும், பற்றாக்குறையாக உள்ள நிலக்கரியை பெற ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அதாவது, சொத்து வரி உயர்விற்குக் காரணம் மத்திய அரசு தான் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எப்படி சொன்னாரோ, அதே பாணியில், மின் தடைக்குக் காரணம் மத்திய அரசு என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டார் அமைச்சர். அதாவது, மின் தடை பெரிய அளவில் ஏற்பட்டால் அதற்குக் காரணம் மத்திய அரசு என்பதுதான் இதன் பொருள். இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து பிறர் மீது பழி போடுவதோ அல்லது அதற்கான காரணத்தைக் கூறுவதோ கண்டனத்திற்குரியது.

எனவே முதல்- அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story