ரூ.1 கோடி செலுத்தினால் ராமேசுவரம் மீனவர்களுக்கு ஜாமீன் இலங்கை நீதிமன்றம் உத்தரவு


ரூ.1 கோடி செலுத்தினால் ராமேசுவரம் மீனவர்களுக்கு ஜாமீன் இலங்கை நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 8 April 2022 1:35 AM IST (Updated: 8 April 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரும் தலா ரூ.1 கோடி செலுத்தினால் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரும் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, மீனவர்கள் 12 பேரும் ஜாமீனில் செல்ல விருப்பப்பட்டால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் எனவும், பணம் கட்ட தவறினால் வருகின்ற மே 12-ந் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்தும் உத்தரவிட்டார்.

அதிர்ச்சி

இதேபோல் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த 4 மீனவர்களுக்கும் வருகின்ற 21-ந் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராமேசுவரம் மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் தலா ரூ.1 கோடி கேட்டு உத்தரவிட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story