கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 9 April 2022 4:29 AM IST (Updated: 9 April 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள திரு.வி.க.நகர் மண்டலத்தில் தீட்டித்தோட்டம் முதல் தெருவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்ட நிதியின் மூலம் ரூ.53 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள பூப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கொளத்தூர், வீனஸ் நகர், செல்விநகர் மற்றும் டெம்பிள் பள்ளி பகுதியில் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உள்வட்டச் சாலையில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர், பல்லவன் சாலையில் மூலதன நிதி மூலம் ரூ.49 லட்சத்து 37 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பகுப்பாய்வு மையம், ஜி.கே.எம். காலனி ஜம்புலிங்கம் தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. நிதி, மூலதன நிதி மூலமாக ரூ.55 லட்சத்து 91 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அவர், எஸ்.ஆர்.பி.கோவில் தெருவில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணப் பொருட்கள், கல்வி உதவித் தொகை, பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, ஆட்டோ, செயற்கைக்கால், மாவு அரவை எந்திரம், மீன்பாடி வண்டி, 4 சக்கர தள்ளுவண்டி, திருமண, மருத்துவ உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் லூர்து மேல்நிலைப்பள்ளியில், அனிதா அகாடமியில் பயிற்சி முடித்த 223 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரத்த சுத்திகரிப்பு மையம்

கொளத்தூர் பெரியார்நகர் அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு மையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

Next Story