“அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” - ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்
மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வந்தால், உள்ளூர் போலீசார் சோதனை நடத்தலாம் என ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
சென்னை,
சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் சோதனை நடத்தி அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த இடைக்கால தடையை நீக்கக்கோரி காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமை உள்ளதாகவும், அதில் காவல்துறையினர் தலையிட முடியாது என்றும் வாதிட்டார். மேலும் சோதனையின் போது காவல்துறையினர் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு மட்டும் தான் சோதனை நடத்துவதற்கு உரிமை உள்ளதாகவும், உள்ளூர் போலீசார் சோதனை நடத்துவதற்கு உரிமை இல்லை எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “சோதனை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக இந்த வழக்குகளை ரத்து செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 1987 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த சோதனைகளை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
மேலும் நியாயமாக தொழில் நடத்தக்கூடிய எந்த ஒரு நிறுவனத்தின் உரிமையிலும் காவல்துறை தலையிடாது என்றும் தவறுகள் நடைபெறும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story