தமிழ், மலையாள புத்தாண்டை ஒன்றாக கொண்டாடிய கல்லூரி மாணவிகள்


தமிழ், மலையாள புத்தாண்டை ஒன்றாக கொண்டாடிய கல்லூரி மாணவிகள்
x
தினத்தந்தி 14 April 2022 3:22 AM IST (Updated: 14 April 2022 3:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழ், மலையாள புத்தாண்டை பாரம்பரிய உடை அணிந்து வந்து சென்னையில் கல்லூரி மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந்தேதி ‘விஷூ' என்று அழைக்கப்படும் மலையாள புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டையும், கேரளாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மலையாள புத்தாண்டையும் கொண்டாட இருக்கின்றனர்.

இந்தநிலையில் ஒற்றுமையை வலியுறுத்தி, சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை ஒன்றாக கொண்டாடும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த 2 பண்டிகைகளையும் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்துவந்து கொண்டாடி அசத்தினார்கள். இதில் மாணவிகளில் சிலர் தமிழர் அடையாளமான பட்டுப் புடவை, தாவணி அணிந்து வந்தனர். சில மாணவிகள் ‘கேரள கசவு' என்று கூறப்படும், அம்மாநில சேலையையும் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வையொட்டி, கல்லூரி வளாகத்தில் பூக்கோலமிடப்பட்டு இருந்தது.

நடனம் ஆடிய மாணவிகள்

அதனைத் தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டமும், மலையாள திருவாதிரை களி நடனம், பாரம்பரிய ஆடை அணிவகுப்பும் நடைபெற்றன.

மேலும், கிருஷ்ணா-ராதை வேடம் அணிந்து மாணவிகள் நடனம் ஆடி மெய்சிலிர்க்க வைத்தனர்.

இதுகுறித்து மாணவி மோகனாம்பாள் கூறுகையில், ‘சமீபத்தில் கேரளா சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அங்கு அனைவருடைய உள்ளங்களையும் ஈர்த்தார். அது இன, மொழி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இருந்தது. அதேபோல், கல்லூரிக்குள் எந்தவிதமான இன மற்றும் மொழி வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தும் விதமாக நாங்கள் தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை ஒன்றாக கொண்டாடி மகிழ்கிறோம்' என்றார்.

Next Story