கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து தமிழக அரசு புறக்கணிப்பு; அமைச்சர்கள் அறிவிப்பு


கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து தமிழக அரசு புறக்கணிப்பு; அமைச்சர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 April 2022 12:35 PM IST (Updated: 14 April 2022 12:40 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் அறிவித்து உள்ளனர்.

சென்னை

சென்னை ராஜ்பவனில் கவர்னர்  ரவி உடன் தமிழக அமைச்சர்கள் தற்போது திடீரென சந்தித்தனர். ஆளுநர் ஆர்.என் ரவி  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் சந்தித்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். கவர்னர்  அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு,  இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி ஆகியவை பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் கவர்னர்  ஆர்.என் ரவியை சந்தித்துள்ளனர். 

கவர்னர் தேநீர் விருந்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் விலக்கு தொடங்கி பல்வேறு மசோதாக்கள் கவர்னர்  வசம் உள்ள நிலையில், கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 கவர்னருக்குடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கிறது;  நீட் விலக்கு மசோதா தொடர்பாக மார்ச் 15ம் தேதி கவர்னரை  சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் கவர்னரின்  நடவடிக்கைகள் வருத்தத்தை அளிக்கிறது 

சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை அலட்சியப்படுத்துவதா?

நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது சட்டமன்ற மாண்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

கவர்னர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது.  இன்று மாலை நடைபெறும் கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் கவர்னரின்  தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை

Next Story