அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா - டிடிவி தினகரன்
இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இளையராஜாவின் இந்தக் கருத்து தற்போது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அது இளையராஜாவின் சொந்த கருத்து. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். அவருடைய தனிப்பட்ட கருத்தை அவர் எழுதியுள்ளார். இதை சர்ச்சைக்குள்ளாக்குவது சரியல்ல என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story