ஏற்ற இறக்கத்தில் பாதிப்பு; தமிழகத்தில் 30 பேருக்கு கொரோனா


ஏற்ற இறக்கத்தில் பாதிப்பு; தமிழகத்தில் 30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 April 2022 5:44 AM IST (Updated: 20 April 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. அந்த வகையில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு நாளும், தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 13 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 30 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக செங்கல்பட்டில் 5 பேரும், வேலூர், திருவள்ளூரில் தலா 2 பேர் உள்பட 8 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அரியலூர், தருமபுரி உள்பட 30 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.

5 குழந்தைகள் பாதிப்பு

12 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 13 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 53 ஆயிரத்து 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 28 ஆயிரத்து 554 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 லட்சத்து 4 ஆயிரத்து 385 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 16 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனாவால் உயிரிழப்பும் இல்லை. மேலும், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 27 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், கோவையில் 2 பேரும் அடங்குவர். இதுவரையில் 34 லட்சத்து 15 ஆயிரத்து 60 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 535 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story