தேர் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார்...!
தஞ்சை களிமேடு பகுதியில் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த சூழலில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கியது. பூக்கள், மின்விளக்குகளால் அலங்கறிக்கப்பட்ட தேர் கிராமத்தில் உள்ள பல்வேறு தெருக்களுக்கு சென்றுவிட்டு சாலை வழியாக மீண்டும் கோவிலுக்கு திரும்பியது.
சாலையில் இருந்து கோவில்க்கு செல்லும் பகுதிக்கு தேர் திரும்பியது. அப்போது, சாலையின் மேலே உயரத்தில் சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது தேரின் உச்சிப்பகுதி உரசியது. சாலை அகலமாக இருந்ததால் சாலையின் கரை பகுதிக்கு தேரை கொண்டு சென்றுள்ளனர்.
இதனால், சாலையின் கரை பகுதி வழியாக உயரே சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது தேரின் உச்சிப்பகுதி உரசியுள்ளது. இதனால், உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தேர் முழுவதும் பாய்ந்தது. இதில், தேரில் இருந்தவர், தேரை இழுத்தவர்கள், தேரின் பின்னால் சிறிய வாகனத்தில் ஜெனரேட்டரை வைத்து வந்துகொண்டிருந்தவர் என பலர் மீது மின்சாரம் பாய்ந்தது.
தேர் திருவிழா என்பதால் தேர் வரும் பாதியில் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டிருந்தது. இதனால், தேரை சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், தேர் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து தொடர்ந்து மின்சாரம் தேர் மீது பாய்ந்ததால் தேரை பிடித்திருந்தவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். சில நிமிடங்கள் தொடர்ந்து மின்சாரம் பாய்ந்த பின்னர் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் தேர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தஞ்சை களிமேடு பகுதியில் தேர் விபத்து நடந்த இடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தஞ்சை களிமேடு பகுதிக்கு செல்கிறார்.
அங்கு விபத்து நடந்த பகுதியை பார்வையிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பின்னர், மின் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் மருத்துவமனையில் சந்தித்து முதல்-அமைச்சர் ஆறுதல் கூறுகிறார்.
இதனிடையே, தஞ்சை தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்த அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story