கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படையில் இடம்பெற்ற டி.எஸ்.பி. பணியிட மாற்றம்


கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படையில் இடம்பெற்ற டி.எஸ்.பி. பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 28 April 2022 6:22 AM GMT (Updated: 2022-04-28T11:52:23+05:30)

கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படையில் இடம்பெற்றிருந்த குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதில் கடந்த 2017 ஆண்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக காவல்துறை சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூடுதல் விசாரணை வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்ப்பட்டு வருகிறது. இந்த தனிப்படையில் இடம்பெற்றிருந்த குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சந்திர சேகரை குன்னூர் டி.எஸ்.பி.யாக நியமனம் செய்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான நீதிபதிகள் மாற்றம் செய்யும் பட்டியலில், கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. நீலகிரி மாவட்ட நீதிபதியாக இருந்த சஞ்சய் பாபா தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இவர் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story