இலங்கை மே தின விழாவில் பிரதமர் மோடிக்கு பாராட்டு; பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு


இலங்கை மே தின விழாவில் பிரதமர் மோடிக்கு பாராட்டு; பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
x
தினத்தந்தி 1 May 2022 12:08 AM IST (Updated: 1 May 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இன்று நடைபெறும் மே தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.

இலங்கை பயணம்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் வேளையில அந்நாட்டுக்கு நிதி மற்றும் பொருட்கள் வழங்கி மத்திய அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும் மேற்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திடீரென்று இலங்கை சென்றுள்ளார். அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12.50 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு இலங்கை சென்றடைந்தார். அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டைமான், நுவேரேலியா முன்னாள் எம்.பி. ராஜதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மே தின பேரணி

இலங்கை பயணம் குறித்து அண்ணாமலை ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் கட்சி நடத்தும் மே தின பேரணியில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன்.

இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். 4 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட உள்ளது.

மோடிக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடனுதவி, எரிபொருள் உதவி வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இந்த மே தின பேரணியில் பாராட்டுகிறார்கள். எனவே நான் இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளேன்.

என்னுடைய இலங்கை சுற்றுப்பயணம் 4 நாட்கள் ஆகும். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 4-ந்தேதி சென்னை திரும்ப உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story