ஈரோடு: விவசாயியை கொன்று நகை, பணம் கொள்ளை....!


ஈரோடு: விவசாயியை கொன்று நகை, பணம் கொள்ளை....!
x
தினத்தந்தி 1 May 2022 1:01 PM IST (Updated: 1 May 2022 1:25 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே விவசாயியை கொன்று நகை,பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது உப்பிலிபாளையம் கிராமம். இங்குள்ள குட்டக்காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65) விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (வயது 62). இவர்களுக்கு கீதா, சுமதி ஆகிய இரு மகள்களும், நாகராஜ் வயது (40) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகள்கள் இருவரும் சென்னிமலையிலும், மகன் கோவையிலும் வசித்து வருகின்றனர்.

வீடு அருகில் உள்ள சுமார் 10 ஏக்கர் சொந்தமான நிலத்தை விவசாயி துரைசாமியும், அவரது மனைவி ஜெயமணியும் கவனித்து வந்தனர். இவர்கள் இருவரும் தினமும் இரவு வீட்டுக்கு வெளியே உள்ள வாசலில் கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். வழக்கம்போல் நேற்று இரவு துரைசாமியும் அவரது மனைவி ஜெயமணியும் வீட்டு வாசலில் ஆளுக்கு ஒரு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தினமும் அதிகாலை 5.45 மணிக்கு பால்காரர் சரவணன் என்பவர் துரைசாமி வீட்டுக்கு சென்று பால் வாங்குவது வழக்கம். வழக்கம்போல் இன்று அதிகாலை பால்காரர் சரவணன் பால் வாங்குவதற்காக துரைசாமி வீட்டுக்கு சென்றுள்ளார். 

அப்போது  துரைசாமியின் முகத்தில் மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு தலையணையால் முகத்தை மூடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

மேலும் துரைசாமியின் மனைவி ஜெயமணி கழுத்திலும் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் சரவணன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். அருகில் இருந்தவர்களும் ஓடி வந்து பார்த்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜெயமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கௌதம் கோயல் ஆகியோரும் விரைந்து வந்து துரைசாமியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான துரைசாமி வீட்டை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அறச்சலூர் இன்ஸ்பெக்டர்கள்  சண்முகசுந்தரம், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

விவசாயி துரைசாமியை கொலை செய்து நடந்த கொள்ளை சம்பவத்தில் துரைசாமி அணிந்திருந்த மோதிரம், அவரது மனைவி ஜெயமணி கழுத்திலிருந்த தாலிக்கொடி மற்றும் வீட்டுக்குள் பீரோவில் இருந்த மருமகளின் தங்க நகைகள் 12 பவுன் என மொத்தம் சுமார் 20 பவுனுக்கு மேல் திருட்டு போனது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாணை நடத்து வருகின்றது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story