நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்: முதல்-அமைச்சர் தகவல்


நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்: முதல்-அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 May 2022 5:56 AM IST (Updated: 5 May 2022 5:56 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக டெல்லி உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அனுப்பி உள்ளார். இந்த தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது.

பின்னர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்பதை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.

அறிக்கை ஏற்பு

அந்த குழு பல்வேறு கோணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதில் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வால் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை ஏற்புடையது என்று அரசுக்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு அறிக்கை அனுப்பியது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து பிளஸ்-2 தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வகை செய்யும் சட்டமசோதாவை 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

திருப்பி அனுப்பினார்

அந்த மசோதாவை பா.ஜ.க. கட்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து அவையை விட்டு வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, சட்டசபையில் அந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த மசோதா 142 நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அதன் மீது சில கேள்விகளை எழுப்பி அதை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்று கூறி சபாநாயகருக்கு பிப்ரவரி 1-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வைத்தார்.

அதைத் தொடர்ந்து உடனடியாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் சிறப்பு சட்டசபையை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 8-ந் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அதன் மீது கவர்னர் ஆர்.என்.ரவி முடிவெடுக்கவில்லை.

தேநீர் விருந்து புறக்கணிப்பு

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நீட் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாததை காரணம் கூறி, தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.

இதற்கிடையே நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் ஆகியோரை சந்தித்த போதெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தி வந்தார்.

அறிவிப்பு

இந்த நிலையில் நேற்று பிற்பகல் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துவரும் நீட் தேர்வில் இருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமசோதாவை கவர்னர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு ஏதுவாக, கவர்னருக்கு மீண்டும் அனுப்பிவைத்தோம்.

இதுதொடர்பாக கவர்னரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்த சட்டமசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமரையும், மத்திய உள்துறை மந்திரியையும் சந்தித்து இந்த சட்டமசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.

அனுப்பி வைத்தார்

அனைத்து கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள். இந்த தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு ஏதுவாக கவர்னர் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவலை கவர்னரின் செயலாளர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி, இந்த சட்டமசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

228 நாட்கள்

அதைத் தொடர்ந்து அவையில் இருந்த ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலமாக மேஜையைத் தட்டி ஒலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதா 2-ம் முறையாக கடந்த பிப்ரவரி 8-ந் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்டு நேற்றோடு 86 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. ஆட்சியில் முதல் முறையாக நீட் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தபோது 142 நாட்களில் அதை கவர்னர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.

ஆக மொத்தத்தில் இந்த ஆட்சியில் நீட் விலக்கு சட்ட மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க 228 நாட்கள் பிடித்துள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற சட்டமசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story