நடத்தையில் சந்தேகம் - மனைவி பணியாற்றி வரும் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவன்...!
சென்னை அருகே மனைவி பணியாற்றி வரும் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(28) வீடுகளுக்கு பால் பாக்கெட் சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஷ்ணு கடந்த 2018-ம் ஆண்டு பவித்ராவை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மனைவி பவித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்ட விஷ்ணு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் வேலை பார்த்து வரும் அலுவலகத்திற்கும் சென்று விஷ்ணு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக மன வேதனை அடைந்த பவித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுவை பிரிந்து வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த விஷ்ணு நேற்று இரவு அவர் வேலை பார்த்து வரும் வடபழனியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
மேலும் பெட்ரோல் குண்டு வீசியதை வீடியோவாக பதிவு செய்த விஷ்ணு அதை மனைவி பவித்ராவின் செல்போனுக்கும் அனுப்பி மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விஷ்ணு மீது ஏற்கனவே வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் போக்சோ, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story