பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 May 2022 4:59 AM IST (Updated: 7 May 2022 4:59 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 28-ந் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 6-ந் தேதி (நேற்று) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. கல்லூரித் தேர்வுகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் அனைத்து மண்டல தலைமை என்ஜினீயர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையில், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், தேர்வு மையங்களில் மின்சார தடை ஏற்படாத வகையில் தடையில்லா மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மின்வெட்டு

இருப்பினும் நேற்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின்தடை ஏற்பட்டு, பின்னர் ½ மணி நேரத்தில் சரி செய்யப்பட்டுள்ளது.

மின்வெட்டு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மின்வெட்டினால், மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் குறைந்து விட்டன என்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த அரசிற்கு உள்ளது. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில், தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story