இந்தி திணிப்பை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்


இந்தி திணிப்பை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 May 2022 9:45 PM GMT (Updated: 2022-05-09T03:15:39+05:30)

இந்தி திணிப்பை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் -வைகோ அறிவிப்பு.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் மீது எப்பாடுபட்டேனும் இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (ஜிப்மர்) இயக்குனர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது, ஜிப்மர் அலுவலக கோப்புகள் அனைத்தையும் எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கிறார். மருத்துவம் கற்பிப்பதற்கு பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிக்கிறார். எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.

எனவே, அந்த சுற்றறிக்கையை அவர் உடனே திரும்ப பெற வேண்டும்; அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி நுழைவாயில் முன்பு ம.தி.மு.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story