திருவள்ளூர்: பட்டபகலில் ரவுடி சரமாரியாக வெட்டி கொலை; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


மூர்த்தி என்கின்ற ஒத்தகை மூர்த்தி
x
மூர்த்தி என்கின்ற ஒத்தகை மூர்த்தி
தினத்தந்தி 9 May 2022 5:35 PM IST (Updated: 9 May 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே உள்ள மதுபான கடையின் பாரில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி என்கின்ற ஒத்தகை மூர்த்தி (வயது 55). இவருக்கு ஒரு கை மட்டுமே உள்ள நிலையில் ரவுடியாக வலம் வந்தார். மேலும் இவர் திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மதுபான கடை அருகே அரசு அனுமதியின்றி பார் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த பார் நடத்துவதில் ரவுடி மூர்த்திக்கும் மற்ற தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று வழக்கம் போல் பாரை திறந்த போது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். 

அப்போது செய்வதறியாது நின்ற மூர்த்தி தப்பி ஓட முயன்ற போது பாரில் சுற்றிவளைத்து மர்ம கும்பல் சரமாரியாக தலையில் வெட்டினர். நிலைகுலைந்து கீழே சாய்ந்த மூர்த்தி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த கும்பல் தலைமறைவாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் விரைந்து வந்த நிலையில் உயிரிழந்த மூர்த்தியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மர்மகும்பலை போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.

பட்டபகலில் படுகொலை செய்யப்பட்ட மூர்த்திக்கு இரண்டு மனைவிகள் மகன், மகள் உள்ளதாகவும், பார் எடுப்பதில் ஒருவருடன் மூர்த்திக்கு தகராறு இருந்து வந்ததால் இதனால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில், இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

பஜாரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் பட்ட பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story