நெடுஞ்சாலையில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சிய டிராக்டர் மீது மோதிய அரசு பஸ் - 15 பேர் படுகாயம்


நெடுஞ்சாலையில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சிய டிராக்டர் மீது மோதிய அரசு பஸ் - 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 May 2022 8:24 PM IST (Updated: 9 May 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை:

தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை அரசு பஸ் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 

அப்போது  தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் செடிகளுக்கு டிராக்டர் டிரைவர் கணேசமூர்த்தி மற்றும் முத்தமிழ்  சிமெண்ட் சிலாப்புகளில் மீது நின்றவாறு டிராக்டர் டேங்கரில் உள்ள குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் திடீரென சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் உள்ள தண்ணீர் டேங்கர் மீது மோதியது. இதில் தண்ணீர் டேங்கர் சேதமடைந்து தலைகீழாக சாலையில் கவிழ்ந்தது .

அதே போல் அரசு பஸ்ஸின் முன் பக்கம் சேதமடைந்தது. இதில் டிராக்டர் டிரைவர் கணேசமூர்த்தி , முத்தமிழ் மற்றும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தஞ்சையை சேர்ந்த மோகன் மற்றும் பஸ் பயணிகள் 13 பேர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர் .

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தினால் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story