மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடு -சீமான் குற்றச்சாட்டு


மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடு -சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 May 2022 11:21 PM GMT (Updated: 9 May 2022 11:21 PM GMT)

மின் உற்பத்தியில் பெரிய அளவில் முதலீடு இல்லை மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடு சீமான் குற்றச்சாட்டு.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. நிறைய வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 10 மணிநேர மின் தடை நிலவுகிறது. அதனை சரி செய்வதற்கு ஏதாவது நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்துள்ளதா? கிடையாது. மாறி மாறி 2 திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை ஆண்டதில் மின் உற்பத்தியில் பெரிய அளவில் முதலீடு செய்யப்படவில்லை. மாறாக மின்சாரத்தை தனியார் பெருமுதலாளிகளிடம் இருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. சூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் இவர்கள் செயல்படுத்தவில்லை.

அலுவலகம், வீடு என்று மாறி மாறி ஏற்படும் பல மணி நேர மின் தடையால் ஒரு நாள் முழுக்கவே மின்சாரம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒரு லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் தரப்போவதாக அரசு அறிவிக்கிறது. முதலில் தடையின்றி மின்சாரம் தரட்டும். பிறகு அதனை இலவசமாக தரலாம்.

மாநில தன்னுரிமையைக் கட்டிக்காப்பவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க. அரசு, மின்தடைக்கு நாங்கள் காரணம் அல்ல என்பதை எப்படி ஏற்க முடியும்?. வெற்று ஏமாற்று வார்த்தைகளால், இனிப்பு அறிக்கைகளால் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story