உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் கொன்று புதைப்பு..!


உளுந்தூர்பேட்டை  அருகே வடமாநில இளைஞர் கொன்று புதைப்பு..!
x
தினத்தந்தி 11 May 2022 8:25 AM GMT (Updated: 11 May 2022 8:25 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்க வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50) விவசாயி. இவர் அதே ஊரில் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வீட்டிற்கு டைல்ஸ் வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை சேத்தியாத்தோப்பில் இருந்து அழைத்து வந்தார். இவர்கள் ரமேஷ் கட்டி வரும் வீட்டின் மாடியில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த மூவரில் ஒருவர் மட்டும் கடந்த 4 நாட்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற நிலையில் மீதமிருந்த இருவரும் நேற்று மாயமானார்கள். இந்த நிலையில் ரமேஷ் கட்டி வரக்கூடிய புதிய வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் அருகே மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து கிடப்பதாக அந்த பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் ரத்தம் உறைந்து கிடந்த இடத்தை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டிப் பார்த்தனர். 

அப்போது மாயமான 2 வடமாநில இளைஞர்களில் ஒருவரான பவுன் குமார் (வயது 22) என்பவர் அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டது எப்படி? காணாமல் போன மற்றொரு வடமாநில இளைஞர் யார்? இவர்களுக்கு எப்படி பிரச்சனை ஏற்பட்டது? என்பது குறித்து வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவருடைய பகுதியில் பணிபுரிந்த மேலும் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story