அறுவை சிகிச்சையின் போது இறந்து பிறந்த குழந்தை - உறவினர்கள் சாலை மறியல்
மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவரது மனைவி பிரனீபா. அவருக்கு தலைப்பிரசவம் என்பதால் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு 9-ம்தேதி அழைத்து வந்துள்ளனர். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும் 2 தினங்களுக்குள் சுகபிரசவம் ஆகும் என்று கூறி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
நேற்று மாலை வரை நன்றாக இருந்த பிரனீபாவிற்கு திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்துவிட்டு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாகவும், குழந்தை திரும்பியுள்ளதால் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும், இல்லையென்றால் தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அவருக்கு அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
ஆனால், அறுவை சிகிச்சையின் போது குழந்தை இறந்து பிறந்துள்ளது. குழந்தை இறப்பிற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்றும், பிரனீபாவுக்கு ரத்த அழுத்த பரிசோதனை ஏன் செய்யவில்லை என்று பயிற்சி செவிலியர்களை டாக்டர் திட்டியதாகவும் குற்றம்சாட்டிய உறவினர்கள், குழந்தை இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இறந்த குழந்தையை தூக்கிச் சென்ற உறவினர்கள் காந்திஜி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்ச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . ஆனால் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ்(மயிலாடுதுறை), லாமேக்(சீர்காழி) ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் நாகையிலிருந்து மருத்துவகுழுவினர் மூலம் மருத்துவசிகிச்சை குறித்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நேற்று இரவு கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story