மினி லாரியின் என்ஜின் நம்பரை மாற்றி மோசடி

பாகூரில் மினி லாரியின் என்ஜின் நம்பரை மாற்றி மோசடி செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பாகூரில் மினி லாரியின் என்ஜின் நம்பரை மாற்றி மோசடி செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மினிலாரி
பாகூரை அடுத்த கரையாம்புத்தூர் சொர்ணாவூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (வயது 36). புதுச்சேரி பொதுப்பணித்துறை கூட்டுறவு அலுவலக ஊழியர். இவர் கடந்த ஆண்டு சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த டேனியல் என்பவரிடம் இருந்து பழைய மினி லாரியை வாங்கி தனது தங்கை சியாமளாவிடம் கொடுத்தார். அவர் அந்த மினிலாரியை ஜல்லி, மணல் வியாபாரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் மினிலாரி பழுதானதால் கடந்த 10 நாட்களுக்கு முன் கடலூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் சரிசெய்ய விட்டுள்ளார். நேற்று முன்தினம் ஞானப்பிரகாஷ், சொந்த வேலை காரணமாக பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் தூக்குப்பாலத்துக்கு வந்தார்.
நம்பரை மாற்றி மோசடி
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் தங்கை சியாமளாவுக்கு வாங்கி கொடுத்த மினிலாரியின் நம்பர் எழுதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அந்த மினிலாரி டிரைவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு நிறுத்தி இருந்த மினி லாரி என்ஜின் நம்பரை சரிபார்த்த போது அதில் ஏற்கனவே இருந்த நம்பர் அழிக்கப்பட்டு சியாமளாவுக்கு வாங்கி கொடுத்த என்ஜின் நம்பர் பதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் ஞானப்பிரகாஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த மினிலாரி பாகூர் பங்களா தெருவைச் சேர்ந்த சங்கர் என்ற அரிபுத்திரிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து என்ஜின் நம்பரை மாற்றி மோசடி செய்ததாக சங்கரை போலீசார் கைது செய்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு லாரியை வாங்கி என்ஜின் நம்பரை மாற்றி ஓட்டி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story