ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திடீரென 50 அடிக்கு உள்வாங்கிய கடல்நீரால் பரபரப்பு..!


ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திடீரென 50 அடிக்கு உள்வாங்கிய கடல்நீரால் பரபரப்பு..!
x
தினத்தந்தி 15 May 2022 5:27 AM GMT (Updated: 15 May 2022 5:27 AM GMT)

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திடீரென 50 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம்,

இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு காசி செல்லும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து புனித நீராடி செல்வார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. வடமாநில, தென்மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி சென்றது.

இதேபோல் முகுந்தராய சத்திரம் மற்றும் அரிச்சல்முனை ஆகிய பகுதிகளிலும் கடல் உள்வாங்கி சென்றது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக கடலில் போட்ட சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் தெரிந்தன. அதனை சில பக்தர்கள் ஆர்வமுடன் சென்று பார்த்தனர். 

பல பக்தர்கள் சுனாமி அச்சத்தில் பின்வாங்கி சென்றனர். அதன் பின்னர் 6 மணி அளவில் உள்வாங்கி சென்ற கடல் மீண்டும் பழைய நிலையை அடைந்தது. இதனால் பக்தர்கள் அச்சம் நீங்கி ஆனந்தமாக கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

இதுபற்றி சில பக்தர்கள் கூறும்போது, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கடலில் இயற்கையாக சில மாற்றங்கள் நிகழும். அப்போது கடல் உள்வாங்கி செல்லும் மேலும் கடலில் உள்ள கழிவுகள் தானாக வெளியில் வந்து விடும். இதற்காக பயப்பட தேவையில்லை. இது வழக்கமான ஒரு நிகழ்வுதான் என தெரிவித்தனர்.


Next Story