மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் தற்போது அனைத்துப் பொருட்களின் விலையும் விஷம் போல் ஏறியிருக்கின்ற சூழ்நிலையில், நூல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் காரணமாக ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் நிதியாண்டு துவக்கத்தில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சு, தற்போது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் 162 விழுக்காடு விலை உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், ஜவுளித் தொழில் சந்தித்து வருகின்ற பிரச்சனைகளுக்கு காரணங்களாக ஆயத்த ஆடைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட இருக்கிறது என்பதும், இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 விழுக்காடு வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டன.
மத்திய அரசு விலையைக் குறைத்தும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவது வியப்பாக உள்ளது. லாபம் ஈட்டும் நோக்கத்தில் பஞ்சினை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்தி விலை உயர்வுக்கு யாராவது காரணமாக இருக்கிறார்களா என்பதை தமிழக அரசு கண்டறிய வேண்டும்.
இது தொடர்பாக தேவைப்பட்டால் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து நூல் விலையைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story